follow

follow

Tuesday, 23 December 2014

கல்லூரியில் ஒரு நாள்....!!!!


கல்லூரி வாழ்க்கை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு ஒரு நாள் சென்று வந்தேன்.
கல்லூரியில் பல மாற்றங்கள்.
முதல் மாறுதல் மாணவனாய் சென்ற நான் பழைய மாணவனாய் அறிமுகம் செய்து கொண்டு உள்ளே சென்றேன்.
கல்லூரியின் கொரிடோக்களில் நடந்து செல்ல கல்லூரி நாட்கள் என்னைப் பின்னோக்கி அழைத்தன.
அதே கொரிடோக்களில் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்தது; சண்டையிட்டது; மற்ற வகுப்பு சகோதரிகளை கிண்டலடித்தது என பல ஞாபகங்கள் என்னுள்.
தனிமை உணர்ந்ததில்லை; நான் அன்று உணர்ந்தேன் என் நண்பர்களில்லாத என் கல்லூரியில் நான் மட்டும் தனியாய் நடந்த போது.
அதிக வெயிலினால் ஒரு சில தாகம் வரும் போது அங்கிள் சமையலுக்காக வைத்திருக்கும் தேசிக்காய்களில் ஒன்றை எடுத்து 6 பேர் பிழிந்து குடிக்கும் போது கண்ட சந்தோசம் கல்லூரியிலுள்ள ஒரு சகோதரி சுவையான பானத்தை என் முன்னே வந்து நீட்டும் போது உணரவில்லை.
என் கண்கள் தேடிச் சென்றது எங்களது அறையை.
என்னை வரவேற்று கண்ணீர் சிந்துவது போல் உணர்ந்தேன்.
நாம் விடுகை வருடத்தில் ஒன்றாய்க் கழித்த எம் அறையைப் பார்த்த போது மௌனமொழி பேசி என் இருப்பிடம் என்னைக் கேட்டது "நீ மட்டும் தான் வந்தாயா?" என்று.
இதயம் கனத்தது.
என்னையறியாமல் ஒரு வலி என்னுள் தோன்ற என் சந்தோசத்தை மட்டுமே பார்த்த என் இருப்பிடம் என் சோகத்தையும் பார்த்தது.
கலங்கியது கண்கள்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மெல்ல நடந்தேன் உணவறையை நோக்கி.
வீட்டால் எவரேனும் கொண்டுவரும் ஒரு உணவுப்பொதியை 30 கைகள் போட்டு, செல்லச் சண்டையிட்டு, கை எட்டாதவர்களுக்கு ஊட்டிவிடும் போது உள்ள சுகம் தனியாளாய் மேசையில் அமர்ந்து சாப்பிடும் போது அன்று கிடைக்கவில்லை.
பகல் நேர சாப்பாடு உரைப்பில்லாத போது யாரும் காணாதவாறு நாமாகவே உப்பு, புளி போட்டு ஒரு சம்பலை செய்து கொண்டு சுவைத்த சுவை அன்று பல சுவைகளுடனும் உண்ட உணவில் நான் அனுபவிக்கவில்லை.
மஸ்ஜித் கொரிடோக்கள், எமக்கேயுரிய சிறு விளையாட்டுத் திடல், புந்தோட்டம் என நாங்கள் கழித்த இடங்களில் நான் மற்றும் நின்று சற்று நேரம் மீண்டும் கல்லூரி நாட்களில் வாழ்ந்து பார்த்தேன்.
ஈமானிய நட்பு உருவான தருணம், ஈமானிய உறவுகளுடன் வாழ்ந்த தருணம் என என் நினைவுகள் என் நிழலாய் வந்தது.
தொலைபேசியை எடுத்து என் நண்பர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பினேன் நான் கல்லூரியில் இருக்கிறேன் என்று.
அனைவரும் ரிப்லை செய்து நாங்கள் வாழ்ந்த நாட்களை நினைவுபடுத்திக் கொண்டனர் என்னோடு.
நான் ஆயிஷாவில் நுழைந்த ஆரம்ப காலங்களில் எமது மூத்த சகோதரிகள் எம்மைப் பார்த்து "இரத்த உறவை விட ஈமானிய உறவு பலமானது" என்ற மகுடத்தை உணர்த்துபவர்களாக இருந்தார்கள்.
அப்போது, "என்ன????? இரத்த உறவை விட ஈமானிய உறவு பலமானதா?? எங்கோ இருந்து வந்து சிறிது காலம் அடைக்கலமான இவர்கள் இரத்த உறவுகளுக்கு சமனாகக் கூட முடியாது" என்று அன்று அலுத்துக் கொண்டேன். ஆனால், காலம் செல்லச் செல்ல "ஆம், இரத்த உறவை விட ஈமானிய உறவு பலமானது" என்பதை நானே உள்ளத்தளவில் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இக்கல்லூரி என்னைப் புடம் போட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நான் கிளம்பும் நேரம் கல்லூரியை ஏற இறங்கப் பார்த்து விட்டு பெருமூச்சு விட்டுத் திரும்பி நடந்தேன்.
என் உடல் மட்டுமே திரும்பி நடந்தது. என் நினைவுகள் அனைத்துமே என் கல்லூரியை சுற்றித்திரிந்த படி!
மீண்டும் கிடைக்காத நிமிடங்கள் கல்லூரி வாழ்க்கையில் மட்டுமே!
அப்போது எனது ஆசிரியர் எப்போதும் நினைவுபடுத்தும் ஒரு வாசகம் என் நினைவைத் தட்டியது.
"لا ثعرف النعم الا بعد زوالها"
"ஒன்றை இழந்த பின்பே அதன் அருமையை உணர்வாய்"
என் ஈமானிய உறவுகளே!!!
நேரம் கிடைத்தால் நீங்களும் சென்றுவாருங்கள் அவரவர் கல்லூரிகளுக்கு.
நீங்கள் சந்தோசமாக இருந்த நாட்களை நினைவுபடுத்தி வாருங்கள்.
பல்வேறு இடங்களை சேர்ந்த மாணவர்களை ஒன்று சேர்க்கும் கல்லூரிகளுக்கும், நட்போடு பழகும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

Post Copy Facebook...

0 comments:

Post a Comment